எங்கள் பெருந்தகை ஓவியர் புகழேந்தி அவர்களின் “நான் கண்ட போராளிகள் களமும் வாழ்வும்” எனும் பொத்தகம் பாரிசில் அறிமுக நிகழ்வு 30.10.2022 நடைபெற்றது. தலைவரின் தனித்துவம் முதல் போராளிகளின் தனித்திறமைகள், ஈகம் வரையாக இப் பொத்தகத்தின் தனித்தனி கதைகள் ஊடாக ஒரு பெரும் யாத்திரை போயுள்ளார்.
எங்கள் செம்மண்ணில் எங்களோடு வாழ்ந்த போராளிகளின் இதுவரை அறியப்படாத பல பக்கங்களை இந்த நூலின் ஊடாக அழகாய் அற்புதமாய் தரிசித்துள்ளார்.
அவர் தரிசித்த புனிதர்களையும் புனிதமான இடங்களையும் வாசகராகிய எமக்கு காட்டிட எமையும் இந்த நூலினூடாக
அழைத்துச் செல்கின்றார்.
இன்னொரு வகையில் சொன்னால் பொதுமக்கள் மற்றும் போராளிகளின் நெஞ்சங்களில் ஆழ ஊடுருவி வேவு செய்து ஆய்வு செய்து பக்குவமாய் பார்த்துப் பதிவு செய்துள்ளார்.
ஒளிகொண்ட பொருத்தமான ஒளிப்படங்களுடன் ஒவ்வொரு போராளிக்கும் தனித்தனியே கட்டுரைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இவ்வரிய நூலின் 183 பக்கத்தில் “போராளி தவா தமிழீழ வரலாற்றுப் பதிவாளன்” எனும் ஒரு தலைப்பு உண்டு.
அந்தப் பக்கத்திலும் அடுத்து வருகின்ற பன்னிரண்டு பக்கங்களிலும் லெப்.கேணல் தவா அவர்களின் வரலாற்றை அழுத்தமாக எழுதியுள்ளார்.
தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் துணை பொறுப்பாளரான லெப்.கேணல் தவா அவதாரம் எடுத்த திருகோணமலை திரியாய் கிராமம் பற்றியும் அவரது தந்தை குறித்தும் எழுதும் போது ஆங்கு நடைபெற்ற படுகொலைகள் தொடர்பிலும் பதிவு செய்துள்ளார்.
1985 ஆம் ஆண்டு ஆகஷ்ட் மாதம் 10ம் திகதி அன்று கிராம சேவகரான இவரது தந்தை உட்பட 16 பேர் பன்குளம் திரியாய் வீதியில் அமைந்திருந்த கஜுத் தோட்டத்தில் வைத்துச் சிங்களப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வரலாற்றின் ஊடாக மாங்கனித்தீவில் இனப்படுகொலையின் பக்கங்களையும் ஆழமாகத் தொட்டுச் செல்கின்றார்.
தந்தை கொல்லப்படுவதற்கு முன்பாக சிங்கள மொழி கற்கவில்லை எனும் காரணத்தால் அவரது வேலை அரசினால் பறிக்கப்படுகின்றது. இதனூடாக தமிழ்பேசும் மக்களிடையே சிங்கள மொழித்திணிப்புக் குறித்தும் அதன் அவலங்கள் தொடர்பிலும் பதிவு செய்யத் தவறவில்லை.
எண்பதுகளின்(80s) பிற்பகுதியில் தன்னோடு அறிமுகமான மூத்த போராளி திருமிகு யோகரத்தினம் யோகி அவர்களின் காதையினையும் அர்த்தம் பொதிந்த ஒளிப்படங்களுடன் அற்புதமாய் பதிவு செய்துள்ளார்.வெளிவந்துள்ளது.
“யோகரத்தினம் யோகி வரலாறும் சமராய்வும்” எனும் அக்கட்டுரையில் சிங்கள தேசம் இணைத்தலைமை நாடுகளுக்கு முன்வைத்த “Project Beacon” எனும் சதித்திட்டம் தொடர்பில் மிகத் துல்லியமாக எழுதியுள்ளார்.
காணொளி ஒன்றில் யோகரத்தினம் யோகி அவர்களின் கனிவு தரும் குரலில் உள்ள அந்த மேடைப் பேச்சினையும் எழுத்து வடிவில் கொண்டு வந்திருப்பதால் தமிழர் வரலாறு நெடுக அந்த விடையங்கள் பயணிக்க வழிகோலியும் உள்ளார்.
Our Nationalism is not narrow, not aggressive and not selfish.
It is inspired and sharpened by the sense of Grievances!
ஒவ்வொரு கட்டுரையினையும் ஏன் ஒவ்வோர் எழுத்தினையும் வாசிக்கும் போதும் மேலுள்ள ஆங்கில வாசகங்கள் தரும் உணர்வே நெஞ்சத்தின் ஆழத்தில் மேலிடுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டுள்ள பல போராளிகளின் வரலாறு பெரும்பாலும் எமது தமிழ்ச்சமூகத்தால் எழுதப்படாமலே இன்னமும் உள்ளது எனும் குறைபாடு உள்ளது.
எங்கள் தமிழ்ச்சமூகத்தின் இவ்வாறான கையறு நிலையினை நிவர்த்தி செய்யும் முகமாக காணாமல் ஆக்கப்பட்ட போராளிகளின் வரலாறும் இப் பொத்தகத்தில் இடம்பெற்றமை இன்னுமோர் சிறப்பு அம்சம் ஆகும்.
தன்மானத் தமிழன் எனும் உணர்வோடு வாழ்வின் பெறுமதி மிக்க பெருமளவு நேரங்களை ஒதுக்கி எமது போராளிகளின் வரலாற்றினை பதிவு செய்த தங்களுக்கு எங்கள் நன்றிகள் ஐயா.